Thursday, February 10, 2011

வாழும் கலையின் தமிழ் வேத வேள்வி


"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'
என திருமந்திரம் செப்பும் "குரு இல்லா வித்தை பாழ்' என்பர் எம்மூத்தோர்.அறியாமை இருளை நீக்கி மருளைப்போக்கி தெளிவை ஏற்படுத்துபவர் குரு ஆவார்.இந்து இலக்கியங்கள் அறிவைப்பெற குருவைநாடிச்சென்று தங்கியிருந்து சேவை செய்தல் வேண்டும் என கூறுகின்றன.
ஆனால் இன்று பூகோளமய மாயையில் சிக்கித்தவிக்கும் உலகமக்கள் தொழில் நுட்பத்துடன் போட்டிபோட்டு தம்மைப்பற்றி தாமே கவனிக்க நேரமற்று நவீன உணவுப்பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு மன,உள நோய்களுக்கு ஆட்பட்டு மிகவேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் ஆன்மீக தாகமோ தன்னம்பிக்கையோ அற்றுள்ள மக்கள் குருகுலத்தையோ குருவையோ நாடிச்செல்லும் நிலையிலில்லை.
இதனால் தான் நவீன வேதியல் விஞ்ஞானியும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஆன்மீக குரு பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலக மக்கள் அனைவரையும் நாடி தானே நேரில்சென்று சுதர்சன கிரியா எனும் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எளிய சுவாசப் பயிற்சியினை அளித்தும் தன்னார்வத்தொண்டர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பெருமாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றார்.
இவ்வகையில் மானிடநேயம் கொண்ட குருஜி தமது அமைப்பின் முப்பதாம் ஆண்டில் கடந்த 22.01.2011 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே அமைந்துள்ள மட்டக்களப்பு மண் ஆன்மீகத்திலும் சளைத்ததல்ல.நகரமத்தியில் பரந்து விரிந்து அந்த முற்றவெளி மைதானம்(வெபர்) அடுக்கடுக்காய் வானுயர்ந்த கம்பங்கள் சீரான இடைவெளியில் கம்பீரமாக காட்சியளித்தன வந்தாரை .வரவேற்க நந்திக்கொடிகள் தென்றலின் உதவியுடன் சிந்துபாடி சிரம் அசைத்தன.
பரந்து விரிந்த மைதானம் போல் ஆங்கே ஒரு மூலையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையும் பரந்து விரிந்தே காணப்பட்டது.மேடையின் நடுவே அழகிய வெண்பதாகை ஒன்று உலக சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக 21,000 மக்கள் இணைந்து தேவாபாராயணம் எனும் செய்தியை பறைசாற்றிக்கொண்டிருந்தது.பதாகைக்குரிய சிவப்பு,வெள்ளை வண்ணத்தெரிவு,சூடு,குளிரைக் குறிப்பதும் சிவ,உமை தத்துவத்தை குறிப்பதுமாக இருக்குமோ என எண்ணத்தோன்றியது.
பரந்து விரிந்த இம்முயற்சிகண்டு அகமகிழ்ந்த வானம் மதிய நேரம் அண்மிக்கும் போது சிறு சிறு வெண்முத்துகளை சிந்தி வாழ்த்தியது.சிந்திய முத்துகள் பூதேவியில் தேங்கிடக்கூடாதென்று தொண்டர்கள் கூடி அகத்துறிஞ்சியால் ஒத்தடம் கொடுத்தனர்.அங்கிருந்த யாவர் மனமும் நிகழ்வு நடக்குமாவென அங்கலாய்த்தது.
அதிசயம்தான் “பிற்பகல் அண்மிக்கும்போது செங்கதிரோன் சிரித்து மகிழ்ந்தான்.மெல்ல மெல்ல மக்கள் மைதானத்தில் கூடினர்.மக்களை ஆற்றுப்படுத்த வெண்ணிற ஆடைகளுடன் தொண்டர்கள் ஆங்காங்கே காணப்பட்டனர்.வரிசை வரிசையாய் ஊர்திகள் அரங்கை நோக்கி அசைந்து வந்தன.இவற்றின் முன் கட்டப்பட்ட பதாகைகள் அவை கண்டி,ஹட்டன்,நுவரெலியா,திருகோணமலை,யாழ்ப்பாணம்,கொழும்பு,மன்னார்,பூநகரி,வவுனியா,வெல்லவாயா முதலிய பிரதேசங்களில் இருந்து வந்ததை அறிவித்தன.
மைதானம் அண்ணளவாக 50,000 மக்களால் நிரம்பி வழிந்தது.மெல்லென பி.ப.3 மணியை அண்மித்தது."குரு ஓம் பாடல் எமதுள்ளத்தை நிரப்பியவேளை குருஜியின் பிரசன்னத்துடன் வேதபராயணம் வானளாவ ஒலிக்க அந்தண சிவாச்சாரியர்கள் “மகாருத்ர'பூசையினை ஆற்றினார்கள்.இவ்வேளை ஐந்து கருடன்கள் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருந்ததை அடியவர்கள் தம்முள் பேசிக்கொண்டிருந்தனர்.
நூல்வேத சமர்ப்பணத்தை தொடர்ந்து "அங்கமும் வேதமும்'எனத் தொடங்கும் தமிழ் வேதமும் பாடசாலைப்பிள்ளைகள்,பக்தர்கள் என 21,000 பேர் ஒரு சேர ஒரே குரலில் பாராயணம் பண்ணியமை மனதை பண்படுத்துவதாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து உலகமாதேவியிடம் ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர் புறநீர்மை பண்ணில் இராமேஸ்வரத்திலிருந்து திருக்கோணேஸ்வரப் பெருமாள் மீது பாடியருளிய"நிரை கழலரவஞ் சிலம்பொலி அலம்பும்' எனும் தமிழ்வேதமும் திருவங்க மாலையிலிருந்து தலை,கண்,நெஞ்சு ஆகிய பாகங்கட்குரிய பாடல்களும் தமிழோசைபாடல் மறந்தடியேன் என்பதற்கிணங்க பாடப்பட்டமை பக்தி பரவசத்தினை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் பொதுமக்கள்,பாடசாலைப்பிள்ளைகள் மட்டுமன்றி அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது. திட்டமிட்டபடி காலதேசவர்த்தமானங்களை கடந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட திகதியில் குறிப்பிட்ட நேரத்தில் 21,000 மக்கள் ஒரே மேடையில் தேவபாராயணம் செய்தமை உள்ளத்தை உருக்குவதாகவே உள்ளது.ஆகையால் இதனை வாழும் கலையின் தமிழ்வேத வேள்வியெனில் அது மிகையில்லை.

No comments: