|
News Message and Photo Courtesy Dinamalar.com |
பாரததேசம் கர்நாடக மாநிலம் பெங்களூர், வேத விஞ்ஞான மஹா வித்யா பீடம், வேத ஆகம சம்ஸ்க்ருத மஹா பாடசாலையில் 260க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேதம், சிவாகமம், சாஸ்த்ரங்கள், யோகா, சைவசித்தாந்தம், திருமுறை, ஆங்கிலம், கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களை பயின்று வருகின்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி அவர்கள், திருக்கோயில்களில் சேவை புரியும் சிவாச்சார்யார்கள் மற்றும் அர்ச்சகர்கள் அவர்களின் பாரம்பரியமான சிறந்த வேத சிவாகம கலைகளில் நன்றாக பயிற்சி பெற்று முறைப்படி பூஜை செய்து இறைவனுக்கும், மக்களுக்கும் பணிவோடும், அன்போடும், பணியாற்ற வேண்டும் என்ற மஹா சங்கல்பத்துடன் 2002ம் ஆண்டு ஸ்ரீஸ்ரீகுருகுலம் என்ற வேத ஆகம சம்ஸ்க்ருத மஹா பாடசாலையை துவக்கினார்கள்.
இப்பாடசாலையில் மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு வித்யார்த்திகள் ஓராண்டு கால அடிப்படை பயிற்சி மற்றும் ஆறாண்டுகால வேத சிவாகம சாஸ்த்ர அடிப்படை சைவ சித்தாந்த, திருமுறை, ஆங்கில கம்ப்யூட்டர் பாடப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இம்மாணவர்கள் கர்நாடக மாநில அரசின் சிவாகம ப்ரவரா தேர்வு, தமிழக அரசின் மகோத்சவ நேரடிப்பயிற்சி சிவாகமத்தேர்வு, சம்ஸ்க்ருத பாரதி சம்ஸ்க்ருத தேர்வு மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பயிற்சி நிறைவில் 18.05.2012 முதல் 26.05.2012 வரை வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 51 மாணவர்களுக்கு வித்யா பீடத்தின் சார்பில் சிவாகம வித்யாநிதி என்ற பட்டத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதுசமயம் அக்டோபர் 3ம்தேதி புரட்டாசி 17ம் நாள் வேத சிவாகம சாஸ்த்ர வித்வான்கள் பங்கேற்கும் வேத ஆகம சாஸ்த்ர கருத்தரங்கமும், அக்டோபர் 4ம்தேதி புரட்டாசி 18ம் நாள் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. முதல் நாள் விழாவை பாடசாலைத் தலைவர் திருமதி.பானுமதி நரசிம்மன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சிவாகம கருத்தரங்கத்தின் முதல் அமர்வு சிவஸ்ரீ.சபேச சிவாச்சார்யார் தலைமையில் நடைபெற்றது. சிவஸ்ரீ, பாலசர்வேஸ்வர சிவாச்சார்யார், அவர்கள் முன்னிலை வகிக்க பிரம்மஸ்ரீ. பாஷபிரகாஷ்சர்மா அவர்கள் சைவாகமம் என்றும், திரு.டாக்டர்.வி. அபிராம சுந்தரம் அவர்கள் வேதாந்த சாஸ்திரங்கள் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்.
இரண்டாம் நாள் பட்டமளிப்பு விழா (அக்டோபர் 4ம்தேதி) அன்று வேத விஞ்ஞான மஹா வித்யா பீட ஸ்தாபகர் யோககுரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி அவர்கள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆதிகுரு ஸ்ரீப்ரக்ஞா தட்சிணாமூர்த்தி வித்யா பிடாதிபதி. பரமபூஜ்ய ஸ்ரீலஸ்ரீ ஓம்காரானந்த மஹா சுவாமிகள் (ஸ்தாபகர், சுவாமி சித்பவானந்தா ஆஸ்ரமம்,தேனி) மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். பாடசாலையின் பிரின்சிபால் சிவஸ்ரீ.ஏ.எஸ்.சுந்தரமூர்த்திசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பாரதீய வித்யாபவன் தலைவர் திரு. என்.இராமானுஜா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். விழாவை சிறப்பிக்க கர்நாடக மாநில அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு.கோட்டா ஸ்ரீனிவாச பூஜாரி அவர்கள், அறநிலையத்துறை ஆணையாளர் திரு. பி.ஜி.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அவர்கள், வேத சிவாகம பாடசாலை முதல்வர், டாக்டர்.பிச்சை சிவாச்சார்யார் அவர்கள் ஸ்ரீஸ்கந்த குருவித்யாலய முதல்வர் சிவஸ்ரீ. எஸ்.கே.இராஜாபட்டர் அவர்கள், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் டிரஸ்ட், டிரஸ்டி, டாக்டர். அருண்மாதவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
பேராசிரியர் டாக்டர்.எஸ்.ஷண்முக சிவாச்சார்யார் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தை பற்றி பாராட்டு உரை வழங்க பாண்டிச்சேரி உலக அமைதி மாநாட்டு குழு உறுப்பினர் திரு.டாக்டர்.என். அர்த்தநாரி அவர்கள் மற்றும் சென்னை விவேகானந்த கல்லூரியின் பேராசிரியர் டாக்டர். அபிராமசுந்தரம் அவர்கள் தொகுப்புரை வழங்கினர். இவ்விழாவில் இந்தியநாடு முழுவதிலுமிருந்து சாஸ்த்ர வல்லுனர்கள், பல்கலைகழகப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். 2000த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீகுருகுல நிர்வாகிகளும், மாணவர்களும் செய்தனர்.